விளையாட்டு விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள்
விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள் நடைபெற்றன.
பெரம்பலூர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் அரியலூர், மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களிலும், மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் பெரம்பலூர், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர்களாக விளங்குவதற்கு 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான பெரம்பலூர் மாவட்ட அளவிலான தேர்வு பெரம்பலூர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதுநிலை மேலாளரும், விளையாட்டு விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான மேற்பார்வையாருமான புண்ணியமூர்த்தி பார்வையிட்டு கண்காணித்தார். இதில் மாணவர்களுக்கு தடகளப்போட்டிகள், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை ஆகிய போட்டிகளில் தேர்வு நடைபெற்றது.
மாணவிகளுக்கு தடகளப்போட்டிகள், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் தேர்வு நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 57 மாணவ-மாணவிகள் விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாவட்ட அளவில் தேர்வு பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான தேர்வு வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் டேக்வாண்டோ போட்டிக்கு மாநில அளவிலான தேர்வு பெரம்பலூரில் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் பயிற்சியாளர்கள் கோகிலா (தடகளம்), வாசுதேவன் (ஹேண்ட்பால்), தர்மராஜன் (டேக்வாண்டோ) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story