22-ந் தேதி மதியம் முதல் சிமெண்டு தொழிற்சாலைகள் லாரிகளை இயக்கக்கூடாது அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியிடப்பட உள்ளதையொட்டி 22-ந் தேதி மதியம் முதல் சிமெண்டு தொழிற்சாலைகள் தங்களது லாரிகளை இயக்கக்கூடாது என்று அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக அனைத்து சிமெண்டு ஆலைகளின் அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர், அண்ணா பல்கலைக்கழக அலுவலர், போக்குவரத்து ஆய்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர், 108 ஆம்புலன்ஸ் மேலாளர் மற்றும் போலீசாருக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, அரியலூர் மாவட்டத்தில் கடந்த 6-ந்தேதி வரை நடந்த சாலை விபத்துகள் பற்றி காணொலியை கொண்டு விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசியதாவது;-
விபத்து நடைபெறும் சாலைகளில் மைய தடுப்புச்சுவர் அமைத்தும், அந்த சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மேடு பள்ளங்களை சரிசெய்தும், எச்சரிக்கை பலகை வைத்தும் வாகன விபத்துகளை குறைக்க வேண்டும். அதிக விபத்து நடைபெறும் இடங்களை கவனித்து விபத்து நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாரம் ஏற்றக்கூடாது. மேலும் வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவு வருகிற 23-ந்தேதி வெளியிடயிருப்பதை முன்னிட்டு, 22-ந்தேதி மதியம் 12 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை சிமெண்டு தொழிற்சாலைகள் தங்களது லாரிகளை இயக்கக்கூடாது. அரியலூர் பஸ் நிலையம் முதல் சத்திரம் வரை சாலைகளின் இருபகுதிகளில் உள்ள தரைப்பகுதி கடைகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். விபத்துகள் ஏற்படாமல் இருக்க காவல் துறை சார்பிலும் சிமெண்டு ஆலை சார்பிலும், நெடுஞ்சாலை துறை சார்பிலும், நகராட்சி, போக்குவரத்து, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மேலாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story