பிளஸ்-1 பொதுத்தேர்வில் 96.93 சதவீதம் பேர் தேர்ச்சி மாநில அளவில் 10-வது இடம்
பிளஸ்-1 பொதுத்தேர்வில் 96.93 சதவீதம் பேர் திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் 10-வது இடம் பிடித்தது.
திருச்சி,
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி முடிவடைந்தது. இந்தநிலையில் தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் 14 ஆயிரத்து 235 மாணவர்களும், 17 ஆயிரத்து 631 மாணவிகளும் என மொத்தம் 31 ஆயிரத்து 866 பேர் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். இதில் 13 ஆயிரத்து 611 மாணவர்களும், 17 ஆயிரத்து 276 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து 887 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 96.93 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை இந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.03 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாநில அளவிலான பட்டியலில் திருச்சி 10-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 13-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு மாநில பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளது. பாடவாரியாக தேர்ச்சி விகிதத்தில் புள்ளியியல் பாடத்திலும், பயோ கெமிஸ்ட்ரி பாடத்திலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
தமிழ் பாடத்தில் 98.63 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 98.43 சதவீதம் பேரும், கணிதத்தில் 98.13 சதவீதம் பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 99.40 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியலில் 96.99 சதவீதம் பேரும், வேதியியலில் 97.78 சதவீதம் பேரும், தாவரவியல் பாடத்தில் 98.65 சதவீதம் பேரும், வணிகவியலில் 98.30 சதவீதம் பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 98.11 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கல்வி அதிகாரிகள் சின்னராஜ் (திருச்சி), அறிவழகன் (லால்குடி), செல்வி (முசிறி), ராஜலட்சுமி (மணப்பாறை) ஆகியோர் உடன் இருந்தனர்.
தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் மாணவ-மாணவிகளின் மதிப்பெண் கள் விவரம் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டது. இதனை மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும் மாணவ- மாணவிகள் தங்களது ஸ்மார்ட் போனில் தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.
Related Tags :
Next Story