குடியாத்தம் அருகே மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை
குடியாத்தம் அருகே மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள தாட்டிமானபல்லி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வனரோஜா (வயது 68). இவருடைய கணவர் நாராயணன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு சுதாகர் என்ற மகன் இருந்தார்.
சுதாகருக்கும், தீபா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி வீட்டின் அருகிலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சுதாகருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை வனரோஜா வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தீபா அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார்.
அப்போது வனரோஜா தலையில் காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா இதுகுறித்து பரதராமி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கே.வி.குப்பம் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வனரோஜா எப்போதும் தனது சுருக்குப்பையில் பணம் வைத்து இருப்பார். அந்த பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story