ஜேடர்பாளையம் பரிசல்துறை பகுதியில் அதிகாலையிலேயே மது விற்பனை பொதுமக்கள் புகார்


ஜேடர்பாளையம் பரிசல்துறை பகுதியில் அதிகாலையிலேயே மது விற்பனை பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 10 May 2019 3:45 AM IST (Updated: 9 May 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

ஜேடர்பாளையம் பரிசல்துறை பகுதியில் அதிகாலையிலேயே மது விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

பரமத்திவேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையத்தில் இருந்து எதிர் கரையான ஈரோடு மாவட்டம் கருவேலம்பாளை யத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுகே தினசரி பரிசல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும் ஜேடர்பாளையம் பரிசல்துறை காவிரி கரையில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பெண்கள் அதிக அளவில் அப்பகுதியில் உள்ள ராஜா வாய்க்கால் மற்றும் காவிரியில் துணிகளை துவைப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் தினசரி வந்து செல்கின்றனர். இப்பகுதியில் சிலர் அதிகாலை முதல் மது விற்பனை செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இருந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பரிசலில் செல்லும் பயணிகள் கூறியதாவது:- சுற்றுலா தலமாக விளங்கும் ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா மற்றும் படுகை அணை பகுதியில் மது அருந்துபவர்கள் எண்ணிகை குறைந்துள்ளது. ஆனால் பரிசல் துறைக்கு செல்லும் வழியில் சிலர் அதிகாலை முதலே மது விற்பனை செய்து வருகின்றனர். ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் மற்றும் மறு கரைக்கு செல்வோர் என சிலர் மது அருந்திவிட்டு செல்கின்றனர்.

மது அருந்துவோர் மதுபோதையில் தகாத வார்த்தைகளை பேசுவதும், அவ்வழியாக செல்வோரை தரக்குறைவாக பேசுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் மீனவர்களும், பெண்களும், பரிசலில் செல்லும் பயணிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த விஷயத்தில் தலையிட்டு மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story