ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 7 பேரின் விடுதலை விவகாரம்: நீதிமன்றத்திற்கோ, கவர்னருக்கோ அழுத்தம் தரக்கூடாது காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி


ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 7 பேரின் விடுதலை விவகாரம்: நீதிமன்றத்திற்கோ, கவர்னருக்கோ அழுத்தம் தரக்கூடாது காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 10 May 2019 3:15 AM IST (Updated: 9 May 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக நீதிமன்றத்திற்கோ, கவர்னருக்கோ அழுத்தம் தரக்கூடாது என்று திருப்பூரில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

திருப்பூர்,

காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் குமரன் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, ஈஸ்வரன், பழனிசாமி, கோபால்சாமி, பொருளாளர் தங்கராஜ், துணை தலைவர்கள் கதிரேசன், கோவிந்த், பொதுச்செயலாளர் ஜவகர், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேனி நாடாளுமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிட்ட எந்த வேட்பாளர்களும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்காத போது, தேர்தல் ஆணையம் ஏன் மறுதேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும். அமெரிக்க அதிபருக்கு இணையாக மோடி வெளிநாடுகளுக்கு பயணம் செல்கிறார். சொந்த அமைச்சரவையை புறம் தள்ளிவிட்டு, மோடி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருகிறார். தன்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி தேர்தலில் மக்களை திசை திருப்புகிறார். 3-ம் அணி இன்றைய இந்திய அரசியல் சூழலில் சாத்தியம் இல்லை. இன்றைய இந்திய அரசியலில் ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து களத்தில் நிற்க வேண்டும்.

மதசார்பற்ற சக்திகள், இடதுசாரி சக்திகளை ஒன்று திரட்டுவதன் மூலம் இந்தியாவில் ஒரு ஆரோக்கியமான அரசியலை உருவாக்க முடியும். ஜனநாயகத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு அதிக நம்பிக்கை உண்டு. அமெரிக்காவின் தேர்தல் முறையை விட இந்தியாவின் தேர்தல் முறை சிறப்பானது. அவ்வளவு புகழ் மற்றும் பெருமை உடைய தேர்தல் ஆணையம் தற்போது பணநாயகத்தின் முன்பு கைகட்டி, வேடிக்கை பார்த்து கொண்டு நிற்பது வேதனையளிக்கிறது.

டி.என்.சேஷன் இருந்த போது தேர்தல் ஆணையம் வானளாவிய அதிகாரத்தை கொண்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்போது தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை. மக்கள் அப்பாவிகளாக இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தான், வாக்குக்காக மக்களிடம் பணத்தை திணித்து வருகின்றன.

தேனியில் ஒரு வாக்காளருக்கு ரூ.2 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. தேர்தலில் பணம் வழங்கும் கலாசாரத்தை நாம் அழிக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரு ஆலோசனையை மட்டுமே வழங்கியுள்ளது. தமிழக அமைச்சரவையின் அந்த முடிவை ஏற்பதும், மறுப்பதும் கவர்னரின் முடிவு. ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம் என காங்கிரஸ் தலைமை ஏற்கனவே சொல்லி விட்டது.

இந்த கொலை வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. 25 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வளவோ தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுதலை செய்யட்டும். 7 பேரையும் விடுதலை செய்யட்டும். ஆனால் எந்த காரணத்தை கொண்டும் நீதிமன்றத்திற்கோ அல்லது கவர்னருக்கோ அழுத்தம் தரக்கூடாது. நீதியை சிறு, சிறு குழுக்கள் முடிவு செய்யக்கூடாது. நீதியை முடிவு செய்ய இவர்கள் கவர்னருக்கு அழுத்தம் தரக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story