காரைக்குடி அருகே, மாட்டு வண்டி பந்தயம்


காரைக்குடி அருகே, மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 9 May 2019 10:30 PM GMT (Updated: 9 May 2019 5:53 PM GMT)

காரைக்குடி அருகே கோவில் மது எடுப்பு திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

காரைக்குடி,

காரைக்குடி அருகே பெரியகோட்டை நான்கு ரோடு செங்கரை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் செங்கரை-ஏம்பல் சாலையில் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் மொத்தம் 53 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை அறந்தாங்கி தினேஷ்கார்த்திக் வண்டியும், 2-வது பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் வண்டியும், 3-வது பரிசை மணவாக்கிப்பட்டி வாசுதேவன் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 41 வண்டிகள் கலந்துகொண்டு 2 பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை வெளிமுத்தி வாகினி வண்டியும், 2-வது பரிசை ஒடித்திக்காடு பெரியகருப்பன் வண்டியும், 3-வது பரிசை தேனி மாவட்டம் கடமலைகுண்டு தேவராஜ் வண்டியும், 4-வது பரிசை பீர்க்கலைக்காடு பெரியசாமி வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை புதுப்பட்டி அம்பாள் மற்றும் நெற்புகப்பட்டி சிங்காரம் வண்டியும், 2-வது பரிசை காரைக்குடி கழனிவாசல் வி.கே.டி டிராவல்ஸ் வண்டியும், 3-வது பரிசை கே.புதுப்பட்டி சின்னச்சாமி வண்டியும், 4-வது பரிசை புளியங்குடியிருப்பு கருப்பையா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story