மாவட்டத்தில் பரவலாக மழை தலைவாசல் அருகே பனை மரம் விழுந்து மாடு செத்தது


மாவட்டத்தில் பரவலாக மழை தலைவாசல் அருகே பனை மரம் விழுந்து மாடு செத்தது
x
தினத்தந்தி 10 May 2019 3:30 AM IST (Updated: 10 May 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தலைவாசல் அருகே பனை மரம் விழுந்ததில் மாடு செத்தது.

சேலம், 

தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதன் காரணமாக இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவைகளின் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் தலைவாசல், கரியகோவில், தம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வாழை உள்ளிட்டவை சூறைக்காற்றால் சேதமடைந்தன. மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

வீரகனூர்-47 , கரியகோவில் -29 , தம்மம்பட்டி -15.6, பெத்தநாயக்கன்பாளையம் -17, ஆணைமேடு -14, எடப்பாடி -8 , வாழப்பாடி- 6, ஆத்தூர் -3.4, சங்ககிரி -5, காடையாம்பட்டி -3.2.

மாவட்டத்தில் மொத்தம் 148.2 மி.மீ. மழை பெய்துள்ளது என கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூர், கோவிந்தம்பாளையம், சித்தேரி, புளியங்குறிச்சி, திட்டச்சேரி, நல்லூர், மணிவிழுந்தான், லத்துவாடி, கிழக்கு ராஜாபாளையம், வீரகனூர், இலுப்பநத்தம், சார்வாய், ஆரத்தி அகரம், காமக்காபாளையம், நாவலூர், காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் மழை பெய்தது.

மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் தேங்கியது. அப்போது இந்த கிராமங்களில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டது.

திட்டச்சேரி ஊராட்சி நல்லூர் கிராமத்தில் கூலித்தொழிலாளி ராஜேந்திரன் தனக்கு சொந்தமான பசு மாட்டை அங்குள்ள ஏரிக்கரையில் கட்டி போட்டு இருந்தார். அப்போது சூறைக்காற்று வீசியதில் பனைமரம் சாய்ந்து அந்த பசு மீது விழுந்தது. இதில் அந்த பசு செத்தது. அதே கிராமத்தில் சின்னசாமி என்பவர் தனது ஆட்டை மின்கம்பத்தில் கட்டி போட்டு இருந்தார். அப்போது மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஆடு செத்தது. லத்துவாடி பகுதியில் நூற்றுக்கணக்கான வாழைமரங்கள் முறிந்து சேதம் ஆனது.

இதேபோல் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தன. சித்தேரி கிராமத்தில் மின் கம்பம் சாய்ந்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சரண்யாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story