அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் நின்ற லாரி போக்குவரத்து பாதிப்பு
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் கனரக லாரி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்,
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஈரோட்டுக்கு மக்காச்சோள பாரம் ஏற்றிய கனரக லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை மாதேவன் (வயது 35) என்பவர் ஓட்டினார். இந்த லாரி நேற்று காலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் உள்ள 1-வது கொண்டை ஊசி வளைவில் வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென அந்த வளைவில் லாரியை டிரைவரால் திருப்ப முடியவில்லை.
இதனால் லாரி நடுரோட்டில் அப்படியே நின்றுவிட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஈரோட்டில் இருந்து மைசூருக்கு சென்ற கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களும், மைசூரில் இருந்து ஈரோட்டுக்கு வந்த வாகனங்களும் வரிசையாக நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாற்று டிரைவர்களை கொண்டு அந்த லாரியை வளைவில் இருந்து திருப்பும் முயற்சி நடந்தது. சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு காலை 7.30 மணி அளவில் லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக செல்லத்தொடங்கின.
கனரக லாரி ஒன்று பர்கூர் மலைப்பாதையில் உள்ள வளைவில் திரும்ப முடியாமல் நின்றதால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
Related Tags :
Next Story