ஆந்திர மாநில அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர்கள் கைது
ஆந்திர மாநில அரசு பஸ்சில் மதுபாட்டில்களை கடத்திய டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனம்,
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து திண்டிவனம் வழியாக ஆரணிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற ஆந்திரா மாநில அரசு பஸ்சை வழிமறித்து போலீசார் சோதனை செய்ததில் பஸ்சில் 394 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் பஸ் டிரைவரான ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா தாலுகா உத்வாராபள்ளி பகுதியை சேர்ந்த சந்திரசேகர்நாயுடு (வயது 45), மாற்று டிரைவரான காஞ்சீபுரம் மாவட்டம் மணப்பட்டியை சேர்ந்த லோகநாதன் (40) ஆகியோர் புதுச்சேரியில் இருந்து ஆரணிக்கு பஸ்சில் மதுபாட்டில்களை கடத்திவந்தபோது பிடிபட்டது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகர்நாயுடு, லோகநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு மாற்று பஸ் மூலம் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஆந்திரா மாநில அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் அந்த பஸ்சை ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story