வடகரை பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் 60 தென்னைகள் சேதம்


வடகரை பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் 60 தென்னைகள் சேதம்
x
தினத்தந்தி 9 May 2019 9:45 PM GMT (Updated: 2019-05-10T00:55:13+05:30)

வடகரை பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 60-க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.

அச்சன்புதூர், 

வடகரை பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 60-க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.

தென்னைகள் சேதம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான வடகரை, அச்சன்புதூர், மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தென்னை, மா, வாழை பயிரிட்டு உள்ளனர். கடும் கோடை வெயில் காரணமாக வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாலும், அடவிநயினார், கருப்பாநதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததாலும், தண்ணீர் மற்றும் உணவைத்தேடி, வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

வடகரை அருகே அடவிநயினார் அணையை அடுத்த சென்னாபொத்தை, மூன்செல்லி ராயர்காடு, பெருசாபலி, கண்டாகாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தென்னை பயிரிட்டு உள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டமாக புகுந்து, தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. தென்னை மரங்களின் குருத்துகளை யானைகள் விரும்பி உண்ணுகின்றன. இதில் 60-க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் அடைந்தன. மேலும் அங்குள்ள மாமரங்களின் கிளைகளையும் யானைகள் முறித்து சேதப்படுத்தி உள்ளன.

தண்ணீர் தட்டுப்பாடு

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர், உணவைத்தேடி, மலை அடிவார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே வனப்பகுதியில் போதிய தண்ணீர் தொட்டிகள், ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து, தொட்டிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும். மலை அடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகாத வகையில், சோலார் மின்வேலிகள், அகழிகள் அமைக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து கடையநல்லூர் வனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம். விளைநிலங்களில் சேதம் அடைந்த தென்னை, மா உள்ளிட்ட மரங்களை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.

Next Story