பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபரை அண்டாவுக்குள் நிற்க வைத்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் தோட்டப்பாளையத்தில் பரபரப்பு


பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபரை அண்டாவுக்குள் நிற்க வைத்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் தோட்டப்பாளையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 10 May 2019 4:45 AM IST (Updated: 10 May 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் தோட்டப்பாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து, அண்டாவுக்குள் நிற்க வைத்து தர்மஅடி கொடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர், 

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வேளாங்கண்ணி. கணவன்-மனைவி இருவரும் நேற்று மதியம் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குள் புகுந்து அண்டாவை திருடினார். அந்த நேரத்தில் அவரின் வீட்டின் அருகே உள்ள மற்றொரு சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகிக்க வந்த நபர், அண்டாவுடன் வந்த வாலிபரை பார்த்து சந்தேகம் அடைந்தார். இதையடுத்து அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்தனர். அதை தொடர்ந்து சத்தியமூர்த்தியும் வேளாங்கண்ணியும் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் வேறு எதுவும் திருட்டுபோகவில்லை என தெரிவித்தனர்.

அண்டாவுடன் சிக்கிய வாலிபரை பொதுமக்கள் அடித்து நையப்புடைத்தனர். மேலும் அந்த வாலிபர் திருடிய அண்டாவுக்குள்ளேயே அவரை நிற்க வைத்து அருகில் மின்கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் தர்மஅடி கொடுத்தனர். திருடன் சிக்கிய தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலர் அங்கு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வாலிபரை மீட்டு, ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் இதேபோன்று பாத்திரங்கள் பல திருட்டு போய் உள்ளது. தற்போது சிக்கிய வாலிபர் ஏற்கனவே எங்கள் பகுதியில் கோவில் உண்டியல் திருடியது தொடர்பாக தர்மஅடி வாங்கி உள்ளார் என்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்டவர் வேலூர் வள்ளலாரை சேர்ந்த காலிஷா (வயது 27) என்பதும், இவர் பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story