குழந்தை விற்பனை தொடர்பாக மதுரை தம்பதி-புரோக்கர்களிடம் ஈரோடு போலீசார் தீவிர விசாரணை
குழந்தை விற்பனை தொடர்பாக மதுரை தம்பதி மற்றும் புரோக்கர்களிடம் போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.
ஈரோடு,
ஈரோடு கைகாட்டிவலசு பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 36). இவருடைய உறவினர் ஒருவர் மதுரையில் வசித்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் தன்னுடைய மனைவியின் விருப்பப்படி குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பினார்.
இதைத்தொடர்ந்து மதுரை தம்பதியினர், சுந்தரை தொடர்பு கொண்டு ‘நாங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறோம். உங்களுக்கு தெரிந்த யாரிடமாவது குழந்தை இருந்தால் வாங்கி தாருங்கள்’ என்று கூறி உள்ளனர். இதனால் சுந்தர், ஈரோட்டை சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் ஒரு புரோக்கரை அணுகி உள்ளார்.
அப்போது அவர்கள் 3 பேரும், ‘சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. நீங்கள் 4½ லட்சம் கொடுத்தால் அதை வாங்கி தருகிறோம் என்று சுந்தரிடம் கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து மதுரை தம்பதியினரும் சம்மதம் தெரிவிக்க புரோக்கர்களிடம் ரூ.4½ லட்சத்தை கொடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெண் குழந்தையை வாங்கி உள்ளனர்.
அதைத்தொடர்ந்து புரோக்கர்கள் 3 பேரும், குழந்தையின் தாய் பிரச்சினை செய்வதாக கூறி மதுரை தம்பதியிடம் இருந்து குழந்தையை வாங்கி சென்றனர். இதன் பின்னர் அவர்கள், மதுரை தம்பதிக்கு குழந்தையும் கொடுக்கவில்லை, அவர்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதுகுறித்து சுந்தர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் கடந்த 6-ந்தேதி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மதுரை தம்பதியை ஈரோட்டிற்கு வரவழைத்து நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் குழந்தையை வாங்கி, விற்பனை செய்த புரோக்கர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஈரோடு போலீசார் சம்பவ நடந்த இடம் சேலம் மாவட்டம் என்பதால் அங்கு சென்று புகார் கொடுங்கள் என்று கூறி மதுரை தம்பதியை அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story