2021-ல் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணி மும்முரம்


2021-ல் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 9 May 2019 10:15 PM GMT (Updated: 9 May 2019 8:30 PM GMT)

2021-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

செம்பட்டு, 

1942-ம் ஆண்டு நடைபெற்ற உலகப் போரின்போது பழுதடைந்த விமானங்களை நிறுத்தி வைப்பதற்காக திருச்சி விமான நிலையம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1981-ம் ஆண்டு பயணிகளின் பயன்பாட்டிற்காக மாற்றியமைக்கப்பட்டது. அப்போது திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இரு முறையாக உயர்த்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பயணிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் வகையில் தற்போது வாரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்ந்தது. இந்தியாவின் தலைசிறந்த முறையில் வளர்ச்சியடைந்து வரும் விமான நிலையங்களில் திருச்சி சர்வதேச விமான நிலையம் முதலிடம் வகித்து வருகிறது.

போதுமான இடவசதி இல்லாதது, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளின் கூட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய முனையம் ரூ.951 கோடியே 28 லட்சம் செலவில் கட்ட முடிவு செய்யப்பட்டு கொல்கத்தாவைச் சேர்ந்த ஐ.டி.டி. நிறுவனமானது இதற்கான ஒப்பந்தத்தை பெற்றது. இந்த முனையத்தின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் கட்டுமான பணியினை, கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

2021-ம் ஆண்டில் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், கட்டுமான பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பிரான்சை சேர்ந்த ‘இசிஸ்’ என்ற நிறுவனமானது திட்ட மேலாண்மை ஆலோசகராக செயல்பட்டுக்கொண்டு இந்தப் பணிக்கான வழி வகைகளை பரிந்துரை செய்து வருகிறது. புதியமுனையமானது 67 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் அமைய இருக்கின்றது. இந்த புதிய முனையத்தில் ஒரே நேரத்தில் 2,800 முதல் 3,000 பயணிகளை கையாளும் வகையில் இட வசதி செய்யப்படுகிறது. அத்துடன் புதிய முனையமானது ‘கிரிகா’-4 அந்தஸ்து பெற்று வடிவமைக்கப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 10 விமானங்களை ஏப்ரான்களில் நிறுத்தலாம். இந்த முனையம் கட்டுமான பணியானது ராட்சத கிரேன்களை கொண்டு அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முனையத்தில் 10 ‘ஏரோ பிரிட்ஜ்’கள் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.

இப்போது புதிதாக 10 மீட்டர் உயரமுடைய ‘ஏர் டிராபிக்’ கட்டுப்பாட்டு அறையும் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. பின்வரும் காலங்களில் விமானங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் நிலையிலும், சரக்கு விமானங்கள் வர வாய்ப்பு இருப்பதாலும் தீயணைப்பு பிரிவின் தரமானது பத்தாவது பிரிவுக்கு உயர்த்தப்பட் டுள்ளது. 500 கார்கள், 20 பஸ்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள முனையத்தை போன்று 6 மடங்கு பிரம்மாண்டமாக புதிய முனையம் அமைக்கப்படுகிறது. மேலும் முனையத்தின் உள்பகுதியில் தஞ்சாவூர் ஓவியங்களும் திருச்சியின் பெருமைகளையும் அது சார்ந்த ஓவியங்களையும் மாதிரி சிற்பங்களையும் அமைக்க உள்ளனர். இதனால் திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கும் பயணிகளுக்கு திருச்சியின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இருக்கும். தற்போது நடைபெற்று வரும் பணியின் வேகம் தொடர்ந்தால் 2020-ம் ஆண்டு இறுதியிலேயே பணிகள் அனைத்தும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு திருச்சி விமான நிலையமானது, வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Next Story