சுள்ளியா அருகே வனப்பகுதியில் கால் முறிந்த நிலையில் சுற்றித்திரியும் காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு
சுள்ளியா அருகே வனப்பகுதியில், கால் முறிந்த நிலையில் சுற்றித்திரியும் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு,
சுள்ளியா அருகே வனப்பகுதியில், கால் முறிந்த நிலையில் சுற்றித்திரியும் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கால் முறிந்த நிலையில் காட்டு யானை
தட்சிணகன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் உள்ளது, கள்ளக்கோடு வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளும், அரியவகை பறவைகளும் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை கள்ளக்கோடு வனப்பகுதிக்கு உட்பட்ட பாலகோடு கிராமப் பகுதியில் கால் முறிந்த நிலையில் சுற்றித்திரிந்து வருகிறது. அதாவது அந்த யானையின் இடது கால் முறிந்த நிலையில் நடக்க முடியாமல் மெதுவாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து வருகிறது.
வனத்துறையினர் பார்வையிட்டனர்
இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் சுப்பிரமணியா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, கால் முறிந்த நிலையில் சுற்றித்திரியும் காட்டு யானையை பார்வையிட்டனர். மேலும் அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் எனவும் ஆலோசித்தனர்.
இதற்கிடையே ஏற்கனவே மைசூரு மாவட்டம் நாகரஒலே வனச்சரகத்திற்கு உட்பட்ட திதிமதி வனப்பகுதியில் கடந்த வாரம் தான் கும்கி யானை துரோனா உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. எனவே, கால் முறிந்த நிலையில் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு உடனே சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை
இதுகுறித்து சுப்பிரமணியா வனத்துறையினர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரமாக கால் முறிந்த நிலையில் காட்டு யானை வனப்பகுதியில் சுற்றி வருகிறது. அந்த காட்டு யானை ஏதாவது குளம், குட்டையில் தண்ணீர் குடிக்க இறங்கிய போது தவறி விழுந்திருக்கலாம். அதனால் யானைக்கு கால் முறிந்திருக்கலாம் என கருதுகிறோம். அந்த யானையின் முன் இடது கால் முறிந்துள்ளது.
அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக நாகரஒலே வனச்சரக கால்நடை மருத்துவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் வந்ததும் யானை பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். தற்போது அந்த யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story