விசாரணை என்ற பெயரில் இரவில் பெண்களை போலீஸ் நிலையங்களில் வைத்து துன்புறுத்தக்கூடாது போலீசாருக்கு, சார்பு நீதிபதி அறிவுறுத்தல்
விசாரணை என்ற பெயரில் பெண்களை இரவு நேரத்தில் போலீஸ் நிலையங்களில் வைத்து துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு, சார்பு நீதிபதி அறிவுறுத்தினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான லிங்கேஸ்வரனின் அறிவுரையின்பேரில் சட்ட உதவி முகாம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு சார்பு நீதிபதியும், சட்ட பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான வினோதா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- ராணுவம் எப்படி தேசத்தை காப்பாற்ற இருக்கிறதோ, அதேபோல் நாட்டு மக்களின் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்ற போலீசார் உள்ளனர். ஆகையால் போலீசார் ஒருபோதும் மனித உரிமை மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. மேலும், விசாரணை என்ற பெயரில் பெண்களை இரவு நேரத்தில் போலீஸ் நிலையங்களில் வைத்து துன்புறுத்தக்கூடாது. குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்யும்போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடந்து கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அனைத்து பிரச்சினைகளையும் எவ்வித தயக்கமுமின்றி அலுவலக வேலை நாட்களில் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவை அணுகினால் அவர்களுக்கு தக்க உதவி கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் கலந்து கொண்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், பொதுமக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சார்பு நீதிபதி வினோதா வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் சமூக சட்ட ஆர்வலர்கள் சரவணன், பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story