திருச்சி குட்ஷெட் பாலம் அருகே ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் கொண்டு சென்ற வேனில் திடீர் தீ ரூ.50 லட்சம் தப்பியது
திருச்சி குட்ஷெட் பாலம் அருகே, ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் கொண்டு சென்ற வேனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 லட்சம் தப்பியது.
திருச்சி,
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வேன் ஒன்று நேற்று பகல் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அந்த வேனில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக ரூ.50 லட்சம் வரை எடுத்து சென்றனர். டிரைவர் கோபி வேனை ஓட்டி சென்றார்.
வேனில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர் உள்பட மொத்தம் 4 பேர் இருந்தனர். திருச்சி குட்ஷெட் பாலம் இறக்கத்தில் வேன் வந்தபோது, டிரைவர் சீட்டின் அருகே இருந்து திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து டிரைவர் மற்றும் ஊழியர்கள் வேனில் இருந்து பணப்பெட்டியுடன் கீழே இறங்கினர். உடனடியாக பணப்பெட்டியை அருகே இருந்த தனியார் ஏ.டி.எம். மையத்துக்குள் பாதுகாப்பாக வைத்தனர்.
பின்னர் ஓடி வந்து வேனில் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மள,மளவென எரிய தொடங்கியது. இதை கண்ட அந்த பகுதியினர் ஓடி வந்து குடத்தில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் வேனை அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகே உள்ள சந்துக்குள் கொண்டு சென்று நிறுத்தினர்.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று வேனில் தீப்பிடித்தது எப்படி? என பார்த்தனர். டிரைவர் சீட் அருகே இருந்த பேட்டரியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்டவுடன் துரிதமாக செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக ரூ.50 லட்சம் தப்பியது. திருச்சியில் ஏ.டி.எம்.மையங்களுக்கு பணம் கொண்டு சென்ற வேனில் தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story