கவுண்டம்பாளையம் அருகே ஆம்புலன்ஸ், வேன் தீ வைத்து எரிப்பு - 4 பேர் கைது


கவுண்டம்பாளையம் அருகே ஆம்புலன்ஸ், வேன் தீ வைத்து எரிப்பு - 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2019 10:30 PM GMT (Updated: 9 May 2019 9:29 PM GMT)

கவுண்டம்பாளையம் அருகே ஆம்புலன்ஸ் மற்றும் வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

துடியலூர்,

கோவை கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், ஆம்புலன்ஸ் அருகே நின்று இருந்த ஒரு வேனும் எரிந்து சாம்பலானது.

இதுதொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பிரேம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்த பாட்டில் மணி என்ற சூர்யகுமார் (வயது 29), ஜீவானந்தம் (18), ஆவாரம்பாளைத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் (22), திருப்பூர் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த கோபால் (18) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதானவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கைதானவர்கள் சில நாட்களாக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் மதுஅருந்தியதும், அதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கண்டித்ததால் ஆம்புலன்ஸ் மற்றும் வேனுக்கு தீ வைத்ததும் தெரியவந்தது.

Next Story