அரசு-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


அரசு-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 9 May 2019 10:45 PM GMT (Updated: 9 May 2019 9:42 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும், தொழிற்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திட, மாவட்ட கலந்தாய்வு மூலம் வருகிற ஆகஸ்டு மாதம் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.ski-l-lt-r-a-i-n-i-ng.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் மேற்கண்ட இணையதளத்தில் எந்த மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். அவரது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்கு மட்டுமே பரிசீலிக்கப்படும்.

மாவட்ட வாரியான அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள் விளக்க கையேட்டில் தரப்பட்டு உள்ளன. ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விராலிமலை தொழிற்பயிற்சி நிலையமும் உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் ஒரே விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஒரே விண்ணப்பத்தின் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும்.இணையதளம் மூலம் விண்ணப்பித்து உள்ள விண்ணப்பதாரர்களுக்கு 31-ந் தேதிக்கு பின்னர் செல்போன் மூலமாக கலந்தாய்வு தேதி குறுந்தகவலாக தெரிவிக்கப்படும். கலந்தாய்வு அன்று அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வு மையத்திற்கு நேரில் வரவேண்டும்.

மேலும், விபரங்களுக்கு புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story