அ.தி.மு.க.வின் துரோக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - டி.டி.வி.தினகரன் பிரசாரம்


அ.தி.மு.க.வின் துரோக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - டி.டி.வி.தினகரன் பிரசாரம்
x
தினத்தந்தி 10 May 2019 3:56 AM IST (Updated: 10 May 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வின் துரோக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று பிரசாரம் செய்தார். அவர் பசுமலை தியாகராஜர் காலனியில் பிரசாரத்தை தொடங்கி திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி, திருநகர், விளாச்சேரி பகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல. அதை தமிழக மக்கள் தெரிந்து கொண்டிருப்பதால் தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அவரது வழியைப் பின்பற்றி செயல்பட்டு கொண்டிருக்கும் அ.ம.மு.க.விற்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தில் மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதேபோல் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்து அ.ம.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும்.

உலகம் முழுவதும் மே 1-ந்தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடுவது போல மே 23-ந்தேதி துரோகிகளை வீட்டுக்கு அனுப்பும் தினமாக பிரகடனமாக வேண்டும். எங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அதை கோர்ட்டு தடை ஆணை வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மக்களைப் பற்றி சிந்திக்கவே இல்லை. ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதுவே அவல ஆட்சிக்கு அடையாளமாக உள்ளது. மக்களின் விரோதியான சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இதேபோல் மக்கள் வாக்களிப்பதன் மூலம் துரோக ஆட்சியை சம்ஹாரம் செய்ய வேண்டும்.

டி.டி.வி.தினகரனுக்கு கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை என்கிறார்கள். மக்களை காப்பாற்ற மக்களுக்காக நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த துரோக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதுவே என்னுடைய கொள்கையும், கோட்பாடுமாக உள்ளது. மோடியின் காலடியில் ஆட்சியை அடகு வைத்துவிட்டு தனக்கும், தன் குடும்பத்திற்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இதனால் அ.தி.மு.க.வின் துரோக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமையும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், விசுவாசிகள் அனைவரும் அ.ம.மு.க.வுக்கு தான் வாக்களிப்பார்கள். அதன்மூலம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.ம.மு.க.வின் கோட்டையாக உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Next Story