ரூ.360 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாக சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது புகார் - நடவடிக்கை எடுக்க தஞ்சை கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தல்


ரூ.360 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாக சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது புகார் - நடவடிக்கை எடுக்க தஞ்சை கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2019 4:30 AM IST (Updated: 10 May 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

ரூ.360 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாக சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் தம்புசாமி, செயலாளர் காதர் உசேன், கரும்பு விவசாயி கபிஸ்தலம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு மனு கொடுத்தனர்.

பின்னர் அது குறித்து ரவீந்திரன் கூறுகையில், “தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையும், திருவிடைமருதூரை அடுத்த கோட்டூரில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த 2 சர்க்கரை ஆலைகளிலும் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் அரவை செய்த கரும்புக்கான பாக்கித்தொகை ரூ.82 கோடியை இதுவரை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை.

இது தொடர்பாக கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தியும் இதுவரை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஆலை நிர்வாகம், விவசாயிகள் கரும்பை பதிவு செய்யும் போது, விவசாயிகளிடம் பல்வேறு படிவங்களில் கையெழுத்தை பெற்றுக்கொண்டு அதனை வைத்து கும்பகோணத்தில் உள்ள பல வங்கிகளில் விவசாயிகளின் பெயரில் ரூ.360 கோடி கடனை ஆலை நிர்வாகங்கள் பெற்றுள்ளன. இநத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அசலும், வட்டியும் செலுத்த வேண்டும் என ஒவ்வொரு விவசாயி பெயருக்கும் வக்கீல் மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாங்கள் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதே நேரத்தில் கடலூர் மாவட்டம் சித்தூரில் இதே சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலையிலும், விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.80 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். அதில் விவசாயி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 8-ந்தேதி கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சர்க்கரை ஆலையின் உரிமையாளர் தியாகராஜனை கைது செய்துள்ளனர்.

எனவே தஞ்சை மாவட்டத்தில் ரூ.360 கோடியை வங்கியில் வாங்கி கரும்பு விவசாயிகளை ஏமாற்றியுள்ள ஆலையின் உரிமையாளரை தஞ்சை மாவட்ட கலெக்டர் கிரிமினல் நடவடிக்கைக்குட்படுத்தி வங்கியில் பெற்ற தொகையை ஆலை நிர்வாகமே செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆலை நிர்வாகம் இதுவரை வழங்காமல் உள்ள கரும்புக்கான நிலுவைத்தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

Next Story