தேர்தல் முடிவு ஒருநாள் தாமதமாகும் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்


தேர்தல் முடிவு ஒருநாள் தாமதமாகும் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 10 May 2019 5:30 AM IST (Updated: 10 May 2019 5:30 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை முழுவதுமாக அறிவிக்க ஒருநாள் தாமதமாகும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்படுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண் தலைமையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. துணை மாவட்ட தேர்தல் அதிகாரி சக்திவேல், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முகமது மன்சூர், ஸ்மித்தா, துணை கலெக்டர் சுதாகர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு வாக்கு எண்ணும் தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

புதுச்சேரியில் உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும். வருகிற 23-ந் தேதி காலை 8 மணி முதல் 8.30 மணி வரை தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 8 அறைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு அறையும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு அறையும் என மொத்தம் 10 அறைகள் தயார் நிலையில் உள்ளது.

ஒரு வேட்பாளர் 104 ஏஜெண்டுகளை நியமிக்கலாம். வேட்பாளர்கள் தங்களது ஏஜெண்டுகளை நியமிக்க விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் 22-ந் தேதி அவர்களுக்குரிய அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஏஜெண்டுகள் ஏதேனும் தவறு செய்தால் வெளியே அனுப்புவதற்கு தேர்தல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. ஒரே எண்ணிக்கையில் 2 வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றிருந்தால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் துறையானது ஒவ்வொரு தொகுதியிலும் 5 வி.வி.பாட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ஒரு வி.வி.பாட் எந்திரத்தை எண்ணுவதற்கு சுமார் 1½ மணி நேரமாகும். அதன்படி புதுச்சேரி முழுவதும் உள்ள 30 தொகுதிகள் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான தொகுதி உள்பட மொத்தம் 155 வி.வி.பாட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும்.

எனவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் சுமார் 25 மணி நேரத்திற்கு பிறகே அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை வெளியிட முடியும். அதாவது நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவு மறுநாள் (24-ந் தேதி) காலை 9 மணியளவில் தெரியவரும். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் 23-ந் தேதி மாலை அறிவிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும், வி.வி.பாட் எந்திரத்திலும் வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் வி.வி.பாட்டில் பதிவாகிய வாக்குகளே இறுதியாக எடுத்து கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story