இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம்: காப்பகத்திற்கு பஸ்சில் அழைத்து வந்த பிளஸ்-1 மாணவி கடத்தல் தந்தை உள்பட 30 பேர் மீது போலீசில் புகார்


இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம்: காப்பகத்திற்கு பஸ்சில் அழைத்து வந்த பிளஸ்-1 மாணவி கடத்தல் தந்தை உள்பட 30 பேர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 11 May 2019 4:30 AM IST (Updated: 10 May 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

இளம்வயது திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பகத்தில் சேர்க்க பஸ்சில் அழைத்து வந்த பிளஸ்-1 மாணவி கடத்தி செல்லப்பட்டார். இதுதொடர்பாக தந்தை உள்பட 30 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள 17 வயது சிறுமிக்கும், உறவினர் ஒருவருக்கும் மணமகன் வீட்டில் நேற்று இளம்வயது திருமணம் நடப்பதாக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் 1077 என்ற எண்ணிற்கு தகவல் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் மலர்விழி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊர்நல அலுவலர் சரோஜா, சைல்டுலைன் நிர்வாகி வைத்தீஸ்வரி மற்றும் பென்னாகரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுமிக்கு 17 வயது என்பதும், அவர் பிளஸ்-1 தேர்ச்சி பெற்று இந்தாண்டு பிளஸ்-2 செல்ல இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவிக்கு நடக்க இருந்த இளம்வயது திருமணத்தை அலுவலர்கள், போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மாணவியை ஊர்நல அலுவலர் சரோஜா, சைல்டுலைன் நிர்வாகி வைத்தீஸ்வரி ஆகிய 2 பேரும் தொப்பூர் அருகே குறிஞ்சி நகரில் உள்ள காப்பகத்தில் சேர்க்க பஸ்சில் அழைத்து வந்தனர். அவர்கள் 3 பேரும் தர்மபுரி 4 ரோட்டில் பஸ்சில் இருந்து இறங்கி தொப்பூர் செல்லும் பஸ்சில் ஏறினர்.

இந்த பஸ் தர்மபுரி கலெக்டர் பங்களா அருகில் சென்ற போது மாணவியின் தந்தை உள்ளிட்ட 30 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த பஸ்சை வழிமறித்தனர். பின்னர் பஸ்சில் அலுவலர் சரோஜா, நிர்வாகி வைத்தீஸ்வரி ஆகியோருடன் அமர்ந்து இருந்த மாணவியை அவர்கள் கடத்த முயன்றனர். இதை அலுவலர் சரோஜா, சைல்டுலைன் நிர்வாகி வைத்தீஸ்வரி ஆகியோர் தடுத்தனர். இவர்களை தாக்கிவிட்டு மாணவியை அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர்நல அலுவலர் சரோஜா, அதியமான்கோட்டை போலீசில் மாணவியின் தந்தை உள்பட 30 பேர் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவை போல் நடந்த இந்த சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story