தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள்


தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 11 May 2019 3:00 AM IST (Updated: 11 May 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாளாகும்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

மாணவர் சேர்க்கை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர இணையதளம் மூலமாக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் எந்த மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

கலந்தாய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் அதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு விண்ணப்ப கட்டணம் ஆகியவை அனைத்தும் இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஐ.டி.ஐ பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள அறிவுரைகளை புரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

மதிப்பெண் மற்றும் இனஒதுக்கீட்டின்படி மாவட்ட கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியலின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்கள் கோரம்பள்ளம், தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வைத்து நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் பயிற்சியாளர்கள் அசல் மாற்றுச் சான்றிதழ், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், அசல் சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, சிறப்பு நிலை முன்னுரிமைச் சான்றிதழ் இருந்தால் அதற்கான அசல் சான்று மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

கடைசிநாள்

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் வருகை நாட்களுக்கு ஏற்ப மாதந்தோறும் ரூ.500 உதவி தொகை வழங்கப்படும். அதே போல் பஸ்கட்டண சலுகை, இலவச சைக்கிள், லேப்டாப், பாட புத்தகங்கள், சீருடைகள், வரைபட கருவிகள், காலணிகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0461-2340133 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந்தேதி ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்த உள்ளார்.

Next Story