கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கலெக்டர் உத்தரவு
கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அருகே உள்ள சாமல்பட்டியில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. இதில் பரசுராமன் என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி ஜிம் மோகன், வெற்றிவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மாவட்ட கலெக்டர் பிரபாகருக்கு பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் பிரபாகர், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஜிம் மோகன், வெற்றிவேல் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story