வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பஞ்சாப் மாநில அதிகாரிகள் பார்வையிட்டனர்
வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக, அந்த மாநில அதிகாரிகள் பார்வையிட்டனர்.
வேலூர்,
வேலூர் மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 230 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது. இதற்காக 42 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இங்கு பிரித்தெடுக்கப்படும் மக்கும் குப்பையான காய்கறி கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று மறுசுழற்சி செய்ய முடியாத மக்காத குப்பைகள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் மாநகராட்சியில் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வேலூரில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த மாநில உள்ளாட்சித்துறை முதன்மை செயலாளர் அஜய்சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று வேலூருக்கு வந்தனர்.
அவர்கள் வேலூர் மாநகராட்சியில் உள்ள காட்பாடி காந்திநகர், கழிஞ்சூர், அரியூர் ஆகிய இடங்களில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட மையங்களுக்கு சென்று அங்கு குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை, மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது, காய்கறி கழிவுகளை பிரித்தெடுப்பது குறித்து அவர்கள் பார்வையிட்டனர். அதேபோன்று சதுப்பேரியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கும் சென்று பார்வையிட்டனர்.
அப்போது வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story