நாகர்கோவிலில் மீண்டும் போக்குவரத்து மாற்றம்


நாகர்கோவிலில் மீண்டும் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 11 May 2019 3:00 AM IST (Updated: 11 May 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மீண்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக உருவாகி உள்ளது. கட்ட பொம்மன் சந்திப்பு அருகே பாதாள சாக்கடை பணிக்காக வாகனங்கள் வேறு பாதையில் மாற்றி விடப்பட்ட பிறகு உருவான போக்குவரத்து நெரிசலால் நகரே ஸ்தம்பித்து போனது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் பிறகு நகரில் அனைத்து சந்திப்புகளிலும் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் செல்ல கூடாது என்றும், சிறிய சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினார்கள். மேலும் பகல் நேரத்தில் கனரக வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட முக்கிய காரணமே கட்ட பொம்மன் சந்திப்பில் இருந்து கோட்டார் போலீஸ் நிலையம் வரை உள்ள ஒரு வழிச்சாலையை இருவழிச்சாலையாக மாற்றியது தான். இந்த சாலை மிகவும் குறுகியது என்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன. எனவே இதை சரிசெய்யும் பொருட்டு அந்த சாலை மீண்டும் ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து மீனாட்சிபுரத்தில் இருந்து வடசேரி செல்லும் வாகனங்களுக்கு மீண்டும் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

அதாவது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ் கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி அரச மூடு சந்திப்பு, நாகராஜா கோவில் முன் புறத்தில் இருந்து மீண்டும் அவ்வை சண்முகம் சாலையில் இணைந்து செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையும் வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும்.

எனினும் நேற்று மதியம் நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. முகூர்த்த நாள் என்பதால் திருமண வீடுகளுக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், இதற்கும் போக்குவரத்து மாற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story