திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்


திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 11 May 2019 3:00 AM IST (Updated: 11 May 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்திருந்தது. இந்த கோவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தது. ரெயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் (போர்ட்டர்கள்) சேர்ந்து இக்கோவிலை அமைத்திருந்தனர். அதன்பிறகு ஒரு அமைப்பாக சேர்ந்து கோவிலை நிர்வகித்து வந்தனர். ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளும், பொதுமக்களும் இக்கோவிலில் வழிபாடு நடத்துவது உண்டு. மேலும் அங்குள்ள ஆட்டோ நிறுத்த டிரைவர்களும் தினமும் வழிபாடு நடத்துவார்கள். ஆண்டு தோறும் திருவிழாக்களும் பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது உண்டு. ரெயில் நிலைய வளாகத்தில் அமைந்திருந்ததால் இக்கோவில் பிரசித்தி பெற்றது.

இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.30 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. ரெயில் நிலையத்தில் அலங்கார வளைவு அமைக்கும் பணி, நடைபாதை மேற்கூரை ரெயில் நிலைய நுழைவு வாயில் வரை நீட்டிப்பு, கூடுதல் நுழைவு பாதையில் பஸ்கள் வந்து செல்ல வசதி, ரெயில் நிலைய வளாகத்தில் முக்கிய பிரமுகர்களின் கார்கள் நிறுத்த வசதி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், அதனை அகற்றிடவும், அந்த இடத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் ரெயில்வே அதிகாரிகள், கோவில் நிர்வாகத்தினருக்கு கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவிலை நிர்வகித்து வந்தவர்களும், இந்து அமைப்பினரும் கோவிலை இடிக்க வேண்டாம் என திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். கோவிலை அகற்றினால் வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்த இடம் ஒதுக்கி தருமாறும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் இதனை ஏற்கவில்லை.

இந்த நிலையில் கோவிலை இடித்து அகற்ற ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை கோவில் முன்பு கண்டோன்மெண்ட் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். கோவிலில் உள்ள மூலவர் அம்மன் சிலை, விநாயகர், நாகம்மாள் உள்பட 13 சிலைகள் அகற்றப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்பின் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலை இடித்து அகற்றும் பணி நடந்தது. 13 சிலைகளும் திருச்சி மேற்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. கோவில் சுற்றுச்சுவர் உள்பட அனைத்தும் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அந்த இடமே தற்போது வெறிச்சோடி உள்ளது.

கோவிலை இடித்து அகற்றும் போது அங்கிருந்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். தினமும் வழிபாடு நடத்தி வந்த கோவில் இடிக்கப்படுவதை எண்ணி கவலை அடைந்தனர். கோவிலையொட்டி உள்ள ஆட்டோ நிறுத்துமிட டிரைவர்கள் செய்வதறியாமல் நின்றனர். போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்ததால் யாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க முடியாமல் தவித்தனர்.

இது குறித்து அங்கிருந்த பக்தர்கள் கூறுகையில், “கோவிலை இடித்து அகற்றி விட்டு அந்த இடத்தில் என்ன மேம்பாட்டு பணி நடைபெற போகிறதோ? தெரியவில்லை. ரெயில் நிலைய வளாகத்தில் விசாலமான இடங்கள் உள்ள நிலையில் பக்தர்கள் வழிபாடு நடத்தக்கூடிய கோவிலை அகற்றாமல் விட்டிருக்கலாம். இந்த இடத்திற்கு பதிலாக ரெயில்வே நிர்வாகம் வேறு இடம் ஒதுக்கி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்றனர். கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து ரெயில்வே வட்டாரத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

Next Story