டெல்லியில் உயிரிழந்த வெற்றியூர் ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்


டெல்லியில் உயிரிழந்த வெற்றியூர் ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
x
தினத்தந்தி 11 May 2019 4:45 AM IST (Updated: 11 May 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உயிரிழந்த வெற்றியூர் ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

கீழப்பழுவூர் ,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. ஆசிரியர். இவருடைய மகன் பாக்யராஜ் (வயது 36). இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி வந்தார். பாக்யராஜுக்கு திருமணமாகி கலைவாணி(30) என்ற மனைவியும், தியா(9) மற்றும் புகழ்மாறன்(3) ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

பாக்யராஜ் கடந்த 2012-ம் ஆண்டு ராணுவ முகாமில் இருந்தபோது, கபடி விளையாட சென்றார். அப்போது அவருக்கு தலையில் பலமாக அடிபட்டதில், உள்காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் பாக்யராஜுக்கு அப்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தலைக்குள் ஏற்பட்ட காயம் நாளடைவில் கட்டியாக மாறியுள்ளது. அதன் தாக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகமானதால் நேற்று முன்தினம் பாக்யராஜ் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடலுக்கு டெல்லியில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, நேற்று அவருடைய உடல் திருச்சிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சொந்த ஊரான வெற்றியூருக்கு பாக்யராஜின் உடல் வாகனம் மூலம் வந்தது. அவருடைய உடலை பார்த்து, அவரது பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

பாக்யராஜின் உடலுக்கு ராணுவ வீரர்கள், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் பாக்யராஜின் உடலுக்கு உறவினர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து பாக்யராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story