20 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பணம் எங்கிருந்து கிடைக்கும் எடியூரப்பாவுக்கு சித்தராமையா கேள்வி


20 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பணம் எங்கிருந்து கிடைக்கும் எடியூரப்பாவுக்கு சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 11 May 2019 4:30 AM IST (Updated: 11 May 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

20 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பணம் எங்கிருந்து கிடைக்கும் என்று எடியூரப்பாவுக்கு சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு, 

20 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பணம் எங்கிருந்து கிடைக்கும் என்று எடியூரப்பாவுக்கு சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

20 பேர் அதிருப்தி

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்வது உறுதி என்றும் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா கூறி இருந்தார்.

இதுகுறித்து கலபுரகி மாவட்டம் சிஞ்சோலியில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள்

முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற பதவி தாகத்தில் எடியூரப்பா இருந்து வருகிறார். அவர், வெறும் 3 நாட்கள் மட்டுமே முதல்-மந்திரியாக இருந்தார். 3 நாட்களில் முதல்-மந்திரி பதவி பறிபோனதால் தனது மரியாதையை எடியூரப்பா இழந்தார். தற்போது மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று மானம், மரியாதை இன்றி எடியூரப்பா கூறி வருகிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் அதிருப்தியில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் அதிருப்தியில் இல்லை. எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். 20 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க, பா.ஜனதாவுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும். எல்லா கட்சியிலும் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியுமா?.

ஆட்சி நிலைத்து இருக்கும்

உமேஷ் ஜாதவை பா.ஜனதாவினர் விலைக்கு வாங்கியுள்ளனர். அவருக்கு பல கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த பணத்தை பா.ஜனதாவினர் உழைத்து கொடுத்தார்களா?. உமேஷ் ஜாதவுக்கு கருப்பு பணம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எடியூரப்பாவும், பா.ஜனதா தலைவர்களும் கடந்த 9 மாதங்களாக கூறி வருகிறார்கள். ஆனால் கூட்டணி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கூட்டணி ஆட்சி பாதுகாப்பாக உள்ளது.

ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது. பா.ஜனதாவினர் பொய் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பா.ஜனதாவினர் பொய்யர்கள். அவர்கள் சொல்வது எதுவும் நடக்காது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்கள். கூட்டணி ஆட்சி நிலைத்து இருக்கும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story