மனநோயின் ஒரு பகுதியாக தற்கொலை எண்ணம் தோன்றினால் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
மனநோயின் ஒரு பகுதியாக தற்கொலை எண்ணம் தோன்றினால், மருந்து மாத்திரைகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பேர் தற்கொலையால் உயிர் இழக்கின்றனர். உயிரியல், உளவியல், சமூக பொருளாதார கலாசார காரணிகளின் கூட்டுத்தாக்கத்தின் அறிகுறியே தற்கொலை நிகழ்வுகள் எனலாம். தற்கொலை முடிவு ஒரு கோழைத்தனமான செயல் என்று தனி நபரை குற்றப்படுத்துவது அறியாமை ஆகும். பாதிக்கப்பட்டவரின் தனிநபர் சார்ந்த சிக்கலாக மட்டுமே இதை அணுகுவது கூடாது. சமூக பொருளாதார கலாசார புறக்காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தனிநபர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணங்களை புரிந்து கொள்ளவும், மீட்டெடுக்கவும் ஒட்டு மொத்த சமூகமும் அக்கறையோடு முன்வர வேண்டும்.
எனவே சக மனிதனின் வாழ்க்கை போராட்டத்தை உற்று கவனிப்பதும், தீர்வு காண்பதற்கு கூட்டாக பயணிப்பதும் அவசியம். மனநோய் உடையவர்கள் மாத்திரைகள் எடுத்து கொள்வதன் மூலமும், இதர மனநல பிரச்சினைகள் உள்ளவர்கள் கவுன்சிலிங் எடுத்து கொள்வதோடு, சமூக காரணிகளை சீர்செய்வதன் மூலமும் முழுமையாக மீண்டு வரலாம். மனநோயின் ஒரு பகுதியாக தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், மருந்து மாத்திரைகள் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.
மனநோய் இல்லாத சூழலில், சமூக பொருளாதார காரணிகளாலும் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இவர்களுக்கு உளவியல் (கவுன்சிலிங்) சிகிச்சை கிடைக்க உதவ வேண்டும். இதன்மூலம் பிரச்சினைகளை எவ்வாறு புரிந்து கொண்டு அணுக வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். தற்கொலை எண்ணங்கள் தோன்றினாலோ அல்லது தங்கள் உறவினர், நண்பர்கள் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தினாலோ அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உதவி கோரலாம்.
எப்போது வேண்டுமானாலும் இலவச தற்கொலை தடுப்புக்கு தொலைபேசி எண்ணான 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்ட மனநல ஆலோசனை மையம் செல்போன் எண்ணான 94860 67686 என்ற எண்ணையும், மருத்துவக்கல்லூரி அவசர சிகிச்சை பிரிவு தொலைபேசி எண்ணான 04322 - 271382 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் 24 மணிநேரமும் மனநோய் அவசர சிகிச்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிடைக்கும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story