பிரசித்தி பெற்ற வஜ்ரேஷ்வரி கோவிலில் ரூ.7 லட்சம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
பிரசித்தி பெற்ற வஜ்ரேஷ்வரி கோவில் உண்டியலை உடைத்து ரூ.7லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
பிரசித்தி பெற்ற வஜ்ரேஷ்வரி கோவில் உண்டியலை உடைத்து ரூ.7லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வஜ்ரேஷ்வரி கோவில்
மும்பையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் பால்கர் மாவட்டம், வசாய் அருகே வஜ்ரேஷ்வரியில் தான்சா ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வஜ்ரேஷ்வரி தேவி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம்செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள வெந்நீர் ஊற்றை மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
ரூ.7 லட்சம் கொள்ளை
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கொள்ளையர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அவர்கள் கோவில் காவலாளியை அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி 4 உண்டியல்களை உடைத்து சுமார் ரூ.7 லட்சத்தை கொள்ளைடித்து சென்று உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து கணேஷ்புரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காண தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் கோவில் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
முன்னதாக கொள்ளை சம்பவம் காரணமாக நேற்று வஜ்ரேஷ்வரி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கொள்ளை தொடர்பான விசாரணை முடிந்தபின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு பலகையும் கோவில் முன் வைக்கப்பட்டு உள்ளது.
பிரசித்தி பெற்ற கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story