காங்கேயத்தில் மறு ஓட்டுப்பதிவுக்காக ஈரோட்டில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


காங்கேயத்தில் மறு ஓட்டுப்பதிவுக்காக ஈரோட்டில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 11 May 2019 4:15 AM IST (Updated: 11 May 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் நடைபெறும் மறு ஓட்டுப்பதிவுக்காக ஈரோட்டில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஈரோடு,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 18–ந் தேதி நடைபெற்றது. இதில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதி திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தில் மாதிரி வாகுப்பதிவுகள் அழிக்கப்படாமல் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டன. இதனால் அந்த வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

அதன்படி ஈரோட்டில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. ஈரோடு ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் கருவிகள் ஆகியன அரசு ஜீப்பில் ஏற்றப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார். அப்போது அரசியல் கட்சியினருடன் அவர் ஆலோசனை நடத்தினார். மேலும், அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு கலெக்டர் கதிரவன் விளக்கம் கொடுத்தார்.

அதன்பின்னர் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18–ந் தேதி நடந்தது. இதில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட திருமங்கலத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அதிகாரி மாதிரி ஓட்டுப்பதிவுகளை அழிக்காமல் ஓட்டுப்பதிவை தொடங்கினார். இந்த தவறு காரணமாக வருகிற 19–ந் தேதி மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நமது மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும் இருப்பு உள்ளன. எனவே இங்கிருந்து மறு ஓட்டுப்பதிவுக்கு தேவையான கருவிகளையும், பொருட்களையும் வழங்க ஒப்புக்கொண்டோம்.

இதற்காக 20 விவிபேட் கருவிகள் மட்டும் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டன. தற்போது மறு ஓட்டுப்பதிவுக்காக ஈரோட்டில் இருந்து 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு விவிபேட் கருவி ஆகியன அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கூடுதலாக 3 கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச்சாவடி மையத்துக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.

வாக்குச்சாவடியில் பணிபுரியும் அதிகாரிகள் திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியால் நியமிக்கப்படுவார்கள். மேலும், தேர்தல் பிரசார கண்காணிப்பு, பொதுமக்களுக்கு மறு வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மறு வாக்குப்பதிவின்போது வாக்காளர்களின் இடது கையின் நடு விரலில் அழியா மை வைக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, தேர்தல் தாசில்தார் ரவிசந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

கடந்த மாதம் 18–ந் தேதி நடந்த தேர்தலில் காங்கேயம் அருகே திருமங்கலத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 736 பேர் ஓட்டுப்போட்டு உள்ளனர். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 50 மாதிரி ஓட்டுப்பதிவுடன் சேர்த்து 786 ஓட்டுகள் காண்பிக்கப்பட வேண்டும். ஆனால் 777 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளதாக காண்பித்தது. இந்த வாக்குகள் வித்தியாசம் குளறுபடியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறும்போது, ‘‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 9 ஓட்டுகள் குறைவாக காண்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியின் தலைமை வாக்குப்பதிவு அதிகாரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு ‘17பி’ எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது.

அந்த வாக்குச்சாவடியில் வருகிற 19–ந் தேதி மறு வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அறையிலேயே வைக்கப்படும். மேலும், பழைய ஓட்டுப்பதிவு நடந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. அந்த எந்திரங்கள் மீது ‘எண்ணுவதற்கு கிடையாது’ என்று ஆங்கிலத்தில் ‘நாட் டூ பி கவுண்ட்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும். மேலும், மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டும் வாக்குகள் எண்ணுவதற்கு பயன்படுத்தப்படும்’’, என்றார்.


Next Story