சிவகங்கை அருகே பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை


சிவகங்கை அருகே பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை
x
தினத்தந்தி 11 May 2019 5:00 AM IST (Updated: 11 May 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் கண்மாய்க்குள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சிவகங்கை,

சிவகங்கை சி.பி. காலனியை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் கண்ணன் (வயது 27). இவர் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் நகரில் சொந்தமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று மதியம் கண்ணன் சிவகங்கையில் உள்ள ஆட்டோ நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். கண்ணன் வழக்கமாக அந்த இடத்தில் இருந்து அருகில் உள்ள ஈசனூர் என்ற கிராமத்திற்கு ஆட்களை ஏற்றி சென்று வருவாராம்.

நேற்று மதியமும் இதேபோல ஒருவரை மட்டும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஈசனூருக்கு சென்றுள்ளார். இலந்தகுடிபட்டி கண்மாய் அருகே சென்ற போது, ரோட்டில் நின்றிருந்த சிலர் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். அப்போது அவர்களுடன் ஆட்டோவில் வந்தவரும் சேர்ந்து கண்ணனிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்ட முயன்றனராம். இதையடுத்து கண்ணன் கண்மாய் பகுதிக்குள் தப்பி ஓடினார்.

ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று கண்மாய்குள் வைத்து கண்ணனை சரமாரியாக வெட்டிக் கொன்றுதப்பி ஓடிவிட்டனர். தகவல் கிடைத்ததும் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், நகர் இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீசார் அங்குவந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சற்று தொலைவில் உள்ள ஒரு வீடு வரை சென்று நின்று விட்டது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட கண்ணன், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் ஆனந்த் என்பவருடன் தகராறு செய்து அவரது ஆட்டோ கண்ணாடியை உடைத்ததாகவும், இதுதொடர்பாக இருதரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் ஆனந்த் தரப்பினர் கண்ணனை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக ஆனந்த் (28), ரஞ்சித் (27), அரவிந்த் (27), பிரவீன் (24), வசந்த் (25), அருண்பாண்டியன் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக அரவிந்த், பிரவீன், வசந்த், அருண்பாண்டியன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story