தொழில் அதிபரை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டல், 6 பேர் கும்பல் கைது -பண்ருட்டியில் பரபரப்பு
பண்ருட்டியில் தொழில் அதிபரை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்பட்ட 6 பேர் கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயரங்கன்(வயது 47). முன்னாள் நகரசபை தலைவர். இவர் கும்பகோணம் சாலையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இவர் தினமும் இரவில் கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் அன்றைய தினம் வசூலான பணத்துடன் வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது வீட்டின் அருகே சென்ற போது, காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்தனர். பின்னர் அந்த கும்பல் விஜயரங்கனை காரில் கடத்தி சென்று, அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, முழுவீச்சில் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் பயந்து போன அந்த கும்பல் மறுநாள், குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரிக்கரையில் விஜயரங்கனை விடுவித்துவிட்டு தலைமறைவாகினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இவ்வழக்கில் எவ்வித துப்பும் துலங்கவில்லை.
இந்த நிலையில் விஜயரங்கனின் செல்போனுக்கு கடந்த 6-ந்தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், அந்த கும்பலின் தலைவன் என்று தன்னை அறிமுகப்படுத்தி, பணம் கேட்டு மீண்டும் மிரட்டல் விடுத்தார். பின்னர் மறுநாள் 7-ந்தேதியும் அந்த கும்பல் தலைவன், விஜயரங்கனை தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.10 லட்சம் தர முடியும் என கூறியுள்ளார். ஆனால் தொகை போதாது என்று செல்போன் இணைப்பை அந்த நபர் துண்டித்துவிட்டார். பின்னர் இது பற்றி விஜயரங்கன் பண்ருட்டி போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விஜயரங்கனுக்கு வந்த செல்போன் நம்பரை வைத்து ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். இதற்கிடையே விஜயரங்கன் செல்போனுக்கு மர்ம கும்பல் தலைவன் பேசிய நம்பரில் இருந்து எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அதில், ரூ.80 லட்சம் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று விஜயரங்கன் தனது கடைக்கு வந்த அழகப்பசமுத்திரத்தை சேர்ந்த வியாபாரி மாயவேல் என்பவருக்கு ரூ.50 ஆயிரம் கடன் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய மாயவேல், அங்கிருந்து நடந்து சென்றார். அப்போது பண்ருட்டி காந்தி சிலை அருகே சென்ற போது, அவரை ஒரு கார் வழிமறித்தது. அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாளை காட்டி மாயவேலை காரில் கடத்தினர். பின்னர், அவரிடமிருந்த ரூ.50 ஆயிரத்தை பறித்துவிட்டு, பண்ருட்டி லிங்க் ரோட்டில் மாயவேலை அந்த கும்பல் விடுவித்தது. இது பற்றி மாயவேல் பண்ருட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பண்ருட்டி திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவில் அருகே மாயவேலிடம் பணம் பறித்த கும்பலின் கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று காரில் இருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் செல்வம் (25), ராசி மகன் சுபாஷ் (22), புலியூர் செல்லப்பன் மகன் விஜயகுமார் (26), கீழ் இருப்பு இளங்கோ மகன் வாசு (23) ஆகியோர் என்பதும், அவர்கள் 4 பேரும் சேர்ந்து மாயவேலை காரில் கடத்தி பணம் பறித்ததும், தொழில்அதிபர் விஜயரங்கனை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், இந்த வழக்கில் பண்ருட்டி அவையாம்பாளையம் தெருவை சேர்ந்த கார்த்தி (37), குருசக்கரவர்த்தி (24) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கார்த்தி, குருசக்கரவர்த்தியை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் செல்வம் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார், அரிவாள், கத்தி மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story