வால்பாறையில், குடியிருப்பு பகுதிக்குள் விடிய விடிய யானைகள் அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்
வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் விடிய விடிய காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
வால்பாறை,
வால்பாறை பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி யதால் காட்டு யானைகள் கூட்டம் அடர்ந்த வனப்பகுதிக்கும், அருகில் உள்ள கேரள வனப்பகுதிக்கும் இடம்பெயர்ந்தன. தற்போது வெப்ப சலனம் காரணமாக வால்பாறை சுற்று வட்டார பகுதியில் அவ்வப்போது கனமழையும், லேசான மழையாகவும் பெய்து வருவதால் காட்டு யானைகள் மீண்டும் வால்பாறை வனப்பகுதிகளுக்கு வரத்தொடங்கி விட்டன.
இந்த நிலையில் கேரள மயிலாடும்பாறை வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 2 குட்டிகள் உட்பட 5 யானைகள் கொண்ட கூட்டம் பன்னிமேடு எஸ்டேட் வழியாக குரங்குமுடி எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்தது. பின்னர் அந்த யானைகள் எஸ்டேட் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறை ஜன்னலையும், பள்ளியை சுற்றி அமைத்து இருந்த வேலியையும், கட்டுமான பொருட்கள் வைத்து இருந்த அறையையும் இடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.
அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் கூட்டம் நேற்று அதிகாலையில் மாணிக்கா எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ரேஷன் கடை சுவரை இடித்து உணவு பொருட்கள் இருக்கிறதா? என தேடின. பொருட்கள் இல்லாததால் அங்கிருந்து சென்றன. பின்னர் தோட்ட அதிகாரி விக்னேஷ் என்பவரின் வீட்டின் சமையலறையை இடித்து அரிசி, பருப்பு, உப்பு ஆகிய பொருட்களை எடுத்து சாப்பிட்டன. வீட்டின் உள் அறையில் குழந்தை மற்றும் மனைவியுடன் தூங்கி கொண்டு இருந்த விக்னேஷ் சத்தம் கேட்டு சென்று பார்த்தார்.
அப்போது யானைகள் சுவரில் இடிந்த பகுதி வழியாக துதிக்கையை உள்ளே விட்டு பொருட்களை எடுத்து சாப்பிட்டு கொண்டு இருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ், தனது மனைவி குழந்தையுடன் படுக்கை அறையில் பதுங்கி கொண்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் மாணிக்கா எஸ்டேட் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து கூச்சலிட்டும் தகரங்களை தட்டியும், டார்ச்சு லைட்களை ஒளிர செய்தும் காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.
அதிகாலை 3.30 மணியளவில் அங்கிருந்து சென்ற யானைகள் மாணிக்கா எஸ்டேட் இடைச்சோலை பகுதியில் முகாமிட்டு உள்ளன. எஸ்டேட் நிர்வாகத்தினரும், மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினரும் யானைகள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
காட்டு யானைகள் வால்பாறை வனப்பகுதிகளுக்கு வரத்தொடங்கி உள்ளதால் எஸ்டேட் பகுதி மக்கள் இரவு நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விடிய விடிய காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story