உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் தர்மபுரியில் கி.வீரமணி பேட்டி


உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் தர்மபுரியில் கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 12 May 2019 3:45 AM IST (Updated: 11 May 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர் சாதியினரின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அவசர அவசரமாக வழங்கி உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது.

இந்த நிலையில் மீதமுள்ள 31 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு உயர்சாதியினர் உள்பட அனைத்து பிரி வினரும் திறந்த நிலையில் நேரடியாக போட்டியிட்டு வாய்ப்புகளை பெறும் நிலை இருந்தது. தற்போது உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் திறந்தநிலையில் நேரடி போட்டிக்கான வாய்ப்பு இடங்கள் 21 சதவீதமாக குறையும். இதனால் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவதில் தங்களுக்கான நேரடி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும்.

இதை எதிர்த்து திராவிடர் கழகம், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால் சமூகநீதிக்கு குரல் கொடுக்கும் அனைவரையும் திரட்டி பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

தமிழகத்தில் சாதி, மத மோதல்களுக்கு இடம் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமை தாக்குதல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமயஅறநிலையத்துறை அரசியல் அமைப்பு சட்டப்படி கோவில்களில் முறைகேடுகளை தடுப்பதற்காக செயல்படும் தணிக்கை துறையாகும். மழைவேண்டி யாகம் நடத்துவது அந்த துறையின் பணி அல்ல. இதுதொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை தனக்கு தோன்றியதை பேசுகிறார். அவருக்கு சட்ட அறிவு தேவை. வரலாற்றை படித்து விட்டு அவர் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story