குடிமங்கலம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை அமோகம் பொதுமக்கள் குற்றச்சாட்டு


குடிமங்கலம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை அமோகம் பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 May 2019 3:45 AM IST (Updated: 12 May 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போடிபட்டி,

குடிமங்கலத்தை அடுத்த கோழிக்குட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

அரசு மதுபானக்கடை மதியம் பன்னிரண்டு மணிக்குத்தான் திறக்கும். ஆனால் எங்கள் பகுதியில் அதிகாலை முதலே தாராளமாய் மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் பல ஆண்கள் அதிகாலையிலேயே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் பகுதிக்குச் சென்று கூடுதல் விலை கொடுத்து குடிக்கின்றனர். இதனையடுத்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலும் வீதிகளிலும் படுத்து உறங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

மேலும் பெருமளவு பணத்தை குடிப்பதற்கே செலவிட்டு விடுவதால் வீட்டிலுள்ள மனைவி,குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவதால் குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை ஏற்படுகிறது. மேலும் அக்கம் பக்கத்தினரிடம் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது.

இத்தகைய பிரச்சினைகளைக் குறைப்பதற்காகவே அரசு மதுக்கடைகள் நேரம் குறைக்கப்பட்டு மதியம் 12 மணிக்குத் திறக்கப்படுகிறது.ஆனால் இதனை சட்டவிரோத மது விற்பனையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிகாலை முதல் நள்ளிரவு வரை மது விற்பனையில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் குடும்பத்தலைவர் மட்டுமல்லாமல் இளைய தலைமுறையினரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதிலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படும் இடங்களுக்கு சென்று மது வாங்கத் தயங்கும் ஒரு சிலருக்காக வீடுகளிலேயே கொண்டுபோய் மது விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிகிறது.

முன்னதாக கோழிக்குட்டை பகுதியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொங்கல் நகரம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்த வேண்டிய நிலை இருந்தது. இதனால் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்பொழுது அருகிலேயே கிடைப்பதால் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லால் இங்கு போலியான மற்றும் கலப்பட மது விற்பனை செய்வதால் குடிப்பவர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

மேலும் கலப்பட மதுவால் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மேலும் இதுபோல குடிமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாகவும் ஒருசில பகுதிகளில் கள் விற்பனை செய்யப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


Next Story