விருதுநகரில் பாரபட்சம் இல்லாத குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை
விருதுநகரில் குடிநீர் பிரச்சினை கடுமையாகி உள்ள நிலையில் பாரபட்சம் இல்லாத குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய நகராட்சி நிர்வாகம் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்துக்கான நிலத்தடி நீர் வறண்டுவிட்ட நிலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து கிடைத்து வரும் 60 சதவீத குடிநீரை கொண்டும், ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்து கிடைக்கும் குடிநீரை வைத்தும் நகராட்சி நிர்வாகம் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது. வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதாலும், நகராட்சி அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாலும் குடிநீர் வினியோகம் சீராக கிடைப்பது இல்லை என நகரின் பல பகுதியில் உள்ள மக்கள் புகார் கூறி வருகின்றனர். எனினும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ஓரளவு முயற்சி எடுத்து வரும் நிலை உள்ளது.
நகரில் 10 முதல் 15 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளதாக கூறப்பட்டாலும் ஒரு சில பகுதிகளில் 5 முதல் 7 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது. இதற்கு காரணம் நகராட்சி ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அந்த பகுதியில் உள்ள முன்னாள் கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு குறைந்த நாட்கள் இடைவெளியில் குடிநீர் விநியோகத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பராபட்சமான நடைமுறை மற்ற பகுதியில் உள்ள மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மேல் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகம் முறையாக கண்காணிக்காததால் இம்மாதிரியான பாரபட்சமான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது.
நகராட்சி லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் எங்கு, எங்கு சென்று குடிநீர் வினியோகம் செய்கிறது என்பதை நகராட்சி நிர்வாகம் முறையாக கண்காணிப்பது இல்லை. இதனால் தேவைப்படும் இடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் தனிப்பட்ட நபர்களின் விருப்பதிற்கு ஏற்ப பாரபட்சமான முறையில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது நீடிக்கிறது. மொத்தத்தில் விருதுநகரில் குடிநீரில் குடிநீர் பிரச்சினை கடுமையாக உள்ள நிலையில் குடிநீர் வினியோகம் பாரபட்சம் இல்லாமல் முறையாக செய்யப்படுவதில்லை என பரவலாக புகார் கூறப்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு குடிநீர் வினியோகத்தை அனைத்து பகுதிகளுக்கும் ஓரே சீரான நாட்கள் இடைவெளியில் பாரபட்சம் இல்லாமல் வினியோகம் செய்வதை உறுதி செய்யும் வகையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதையும், தனிநபர் விருப்பத்துக்கேற்ப வினியோகம் செய்யாமல் நகராட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பில் தேவைப்படும் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.