தேனியில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
தேனியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை கலெக்டர் பல்லவிபல்தேவ் தொடங்கி வைத்தார்.
தேனி,
தேனி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, போலீஸ் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுடன், 50 பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு பஸ்களாக ஏறி அவர் ஆய்வு செய்தார். மேலும் அந்த பள்ளி வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்தார்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா? என்பது குறித்து இந்த கூட்டாய்வு நடத்தப்பட்டது. தினமும் 50 வாகனங்கள் வீதம் ஆய்வு செய்யப்பட உள்ளது. வருகிற 25-ந்தேதி வரை இந்த கூட்டாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த ஆய்வில் வாகனத்தின் நிறம், பள்ளி பற்றிய விவரம், தொடர்பு எண்கள், பிரதிபலிப்பான் பட்டைகள், பிரேக் திறன், உருளைபட்டைகளின் நிலை, அவசரக் கதவு சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா? வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, வாகனத்தின் இருக்கை நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள், வாகன ஓட்டுனரின் இருக்கை, வாகனத்தின் உட்புறம், தரைப்பலகை, ஜன்னல்கள், சிவப்பு மற்றும் வெள்ளை பிரதிபலிப்பான், முதலுதவிப் பெட்டி, மருந்துகள், தீயணைக்கும் கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் நிலை குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் குறைபாடுகள் கண்டறியப்படும் வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்து பள்ளி திறப்பதற்கு முன் மீண்டும் ஆய்விற்கு சமர்ப்பித்து சான்று பெற்ற பின்புதான் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஓட்டுனர்கள் வாகனத்தினை இயக்குவதற்கு முன்பு, அதை பரிசோதனை செய்த பின்னரே இயக்கிட வேண்டும். ஓட்டுனர்கள் முழு கவனத்துடன் வாகனத்தை இயக்குவதோடு, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் இயக்கக் கூடாது.
தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 43 பள்ளிகளை சேர்ந்த 326 வாகனங்கள், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 58 பள்ளிகளை சேர்ந்த 273 வாகனங்கள் என மொத்தம் 101 பள்ளிகளை சேர்ந்த 599 வாகனங்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் வருகிற 25-ந்தேதி அனைத்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் பாதுகாப்பான முறையில் வாகனத்தை இயக்குவது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்நாள் ஆய்வில் 50 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் 8 வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கப்படவில்லை. குறைபாடுகளை சரி செய்து விட்டு ஒரு வார காலத்துக்குள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து, உத்தமபாளையம் சப்- கலெக்டர் வைத்திநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சுரேஷ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செல்வம், செந்தில்குமார், முகமது மீரா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story