திருச்சியில் மாநாடு நடத்த திட்டம்: “ரஜினிகாந்த் தாமதமாக அரசியலுக்கு வருவது நல்லதுக்குதான்” அண்ணன் சத்தியநாராயணராவ் பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் தாமதமாக அரசியலுக்கு வருவது நல்லதுக்குதான் என்று அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் தெரிவித்தார். மேலும் திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருச்சி,
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர், திருச்சியை அடுத்த குமாரமங்கலம் பைபாஸ் ரோடு அருகே அவருக்கு சொந்தமான 1,850 சதுர அடி இடத்தில் ரஜினிகாந்தின் பெற்றோர் ராமோஜிராவ்-ராம்பாய் ஆகியோருக்கு ரூ.35 லட்சம் செலவில் மணிமண்டம் கட்டினார். கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ரஜினி காந்தின் அண்ணன் சத்திய நாராணராவ் நேரடியாக வந்து, பெற்றோரின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். மணி மண்டபத்தில் ராமோஜிராவ்-ராம்பாய் ஆகியோரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. தனிநபர் மணிமண்டபத்தை கட்டினாலும், ரஜினி மக்கள் மன்றம் சார்பில்தான் திறப்பு விழா நடந்தது. இந்த நிலையில், மணிமண்டபத்திற்கு நேற்று மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி காந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ் நேற்று அங்கு வருகை தந்தார். அவருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சாதுக்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தாமதமாகிக்கொண்டே இருக்கிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்தியநாராயணராவ் கூறியதாவது:-
திருச்சியில் கட்டப் பட்டுள்ள மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் விரைவில் வருவார். தற்போது அவர் மிகவும் ‘பிஸி’யாக உள்ளார். ஆனாலும், இங்கு நடக்கும் நிகழ்வுகளை தொலைபேசி மூலம் கேட்டு கொண்டும், வீடியோவில் பார்த்து கொண்டும்தான் உள்ளார். மண்டலாபிஷேக நிகழ்ச்சியில், நாட்டு மக்கள் நலமாக இருக்கவும், நல்ல மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும் பூஜைகள் செய்யப்பட்டன.
ரஜினிகாந்த் அரசியல் கட்சியை, எப்போது வெளியிடுவார் என நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். அவர், அரசியலுக்கு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற 23-ந் தேதிக்கு பிறகு முக்கிய அறிவிப்பை அவர் வெளி யிடுவார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தாமத மாகி கொண்டு இருப்பது பற்றி சிலர் கூறி வருகிறார்கள். அவர் தாமதம் செய்வது நல்லதுக்கு தான். அவர், தமிழக மக்களுக் காக நிறைய திட்டங்களை வைத்துள்ளார். தமிழக அரசியல் சூழ்நிலையை அவர் உற்றுநோக்கி வருகிறார். நிச்சயம் அவர், அரசியலுக்கு வந்தே தீருவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வருகிற 23-ந் தேதிக்கு பிறகுதான் என்று அண்ணன் சத்திய நாராயணராவ் அறிவித் திருப்பதும், விரைவில் ரஜினிகாந்த் தனது பெற்றோர் மணிமண்டபத்தை பார்க்க திருச்சி வருகிறார் என்ற அறிவிப்பிலும் சூசகம் உள்ளது என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏனென்றால், தனது அரசியல் பிரவேசத்தை ரஜினிகாந்த், திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடத்தி அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story