ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க போலீசார் அறிவுரை


ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க போலீசார் அறிவுரை
x
தினத்தந்தி 12 May 2019 4:15 AM IST (Updated: 12 May 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தினர்.

ஊட்டி,

கோடை வாசஸ்தலமான நீலகிரியில் கோடை சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனை அனுபவிக்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சொந்த அல்லது வாடகை வாகனங்களில் ஊட்டிக்கு அதிகளவில் வருகை தருகிறார்கள். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின்படி ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் மேற்பார்வையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

இதற்காக ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே ஊட்டி நகரில் உள்ள முக்கிய சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் செல்வதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊட்டி நகரில் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை போன்ற சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த ஒலிபெருக்கிகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, 12 புதிய ஒலிபெருக்கிகள் என மொத்தம் 17 ஒலிபெருக்கிகள் சரிபார்க்கப்பட்டன.

ஊட்டியில் 26 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள புறக்காவல்நிலையத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை டி.வி.யில் பார்த்து சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் அறிவுரை வழங்கி வருகிறார்கள். ஊட்டி நகருக்குள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது.

சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் இருபுறமும் பார்த்து விட்டு, செல்போனை பயன்படுத்தாமல் கடக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு நடக்க வேண்டும். கார்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். விபத்து ஏற்படுவதை தவிர்க்க சாலையில் நடப்பதை விடுத்து, நடைபாதையில் நடந்து செல்ல வேண்டும். விபத்தில்லா நகரமாக ஊட்டியை மாற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

மேற்கண்டவை முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளில் ஒலித்துக்கொண்டே இருப்பதால், ஊட்டிக்கு புதியதாக வரும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற ஏதுவாக இருக்கிறது.

மேலும் போக்குவரத்தை சரிசெய்ய உதவுகிறது. சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் எங்கே இருக்கிறது, எந்த வழியாக செல்ல வேண்டும் என்பது குறித்த தகவல் பலகைகள் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டு உள்ளன. கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story