பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா திரளான மக்கள் பங்கேற்பு


பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா திரளான மக்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 May 2019 3:15 AM IST (Updated: 12 May 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடந்தது. விழாவில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

ஓட்டப்பிடாரம், 

பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடந்தது. விழாவில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

ஆலய திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா மற்றும் அவரின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தின் 63-வது ஆண்டு விழா நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. விழாவை முன்னிட்டு அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், 9 மணிக்கு விழா கொடியேற்றமும் நடந்தது. அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அன்னதானம் சாப்பிட்டனர்.

மாலை 6 மணிக்கு கோவில் வடக்கு மேடையில் நாதஸ்வர நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடந்தது. அதே போல் இரவு 7 மணிக்கு தெற்கு மேடையில் இன்னிசை கச்சேரி, அரசு இசைப்பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் மற்றும் சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலயம் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

அரசு மரியாதை

திருச்செந்தூர், கயத்தாறு, சிந்தலக்கரை, வைப்பாறு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமத்துரை நினைவு ஜோதியை வீரசக்கதேவி ஆலயத்துக்கு கொண்டு வந்தனர். அந்த ஜோதிகளை ஆலய குழு தலைவர் முருகபூபதி பெற்று கொண்டார்.

முன்னதாக அரசு சார்பில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் தாசில்தார் மலர்தேவன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு பஸ்கள்

இந்த விழாவில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக அரசு சார்பில் தூத்துக்குடியில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த விழாவில், கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மதுரை, ஆலய குழு செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்புராஜ் சவுந்தர் உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

மாட்டுவண்டி போட்டி

2-ம் நாளான நேற்று திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயம் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து ஓட்டப்பிடாரம் வழியாக கீழமுடிமன் வரை நடந்தது. இதில் 6 வண்டிகள் பங்கேற்றன. போட்டியை ஆலய குழு தலைவர் முருகபூபதி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தொடங்கி வைத்தார். அதே போல் சின்ன மாட்டு வண்டி பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கி ஓட்டப்பிடாரம் வழியாக புற்றுமுருகன் கோவில் வரை நடந்தது. இதில் 14 வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியை மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசந்திரன் தொடங்கினார். இந்தபோட்டியில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.

பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற பூசனூரை சேர்ந்த பிருத்திஸ்காவிற்கு முதல்பரிசாக ரூ.40 ஆயிரமும், 2-வது பரிசாக கல்லூரணியை சேர்ந்த அரிபாலகிருஷ்ணன் என்பவருக்கு ரூ.35 ஆயிரமும், 3-வது பரிசாக சிந்தலக்கட்டையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு ரூ.28 ஆயிரமும் வழங்கப்பட்டது. அதே போல் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் மேட்டூரை சேர்ந்த சிவன்கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், சண்முகபுரத்தை சேர்ந்த விஜயகுமாருக்கு 2-வது பரிசாக ரூ.17 ஆயிரமும், 3-வது பரிசாக சிங்கிலிப்பட்டியை சேர்ந்த மாட்டு வண்டிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடந்தது.

Next Story