தேர்தல் ஆணைய உத்தரவின்படி வெங்கட்டா நகர் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு


தேர்தல் ஆணைய உத்தரவின்படி வெங்கட்டா நகர் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 May 2019 4:45 AM IST (Updated: 12 May 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வெங்கட்டா நகர் வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடக்கிறது.

புதுச்சேரி,

புதுவை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 18–ந்தேதி நடந்தது. காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி வெங்கட்டா நகர் இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. அப்போது மாதிரி வாக்குப்பதிவின்போது வி.பி.பாட் எந்திரத்தில் இருந்த வாக்குச்சீட்டுகளை அப்புறப்படுத்தாமல் வாக்குப்பதிவு நடப்பது பற்றிய விவரம் அங்கு பணியாற்றிய தேர்தல் அதிகாரிக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாக்குசீட்டுகளை அவர் அகற்ற முயற்சித்ததால் பிரச்சினை ஏற்பட்டது.

இதுகுறித்து புதுவை தேர்தல்துறை, தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு நடந்த வாக்குப்பதிவினை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வசதிக்காக நிழற்பந்தல், குடிநீர், சாய்தள அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடமாடும் கழிப்பிட வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடியில் 473 ஆண்கள், 479 பெண்கள் என 952 வாக்காளர்கள் உள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவினை முன்னிட்டு அந்த பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 6 மணிவரை மக்கள் கூட்டமாக கூடுதல் மற்றும் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்கள், பாதைகள் மற்றும் வீதிகளில் 5–க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுதல், ஆயுதங்கள் மற்றும் கம்புகள் வைத்திருத்தல், பிரசார பலகைகள் மற்றும் அட்டைகள் ஏந்தி செல்லுதல், கோ‌ஷங்கள் எழுப்புதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவினை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ள 2 மதுபான குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கட்டிடத்தில் மற்ற வாக்குப்பதிவு எந்திரங்களுடன் சேர்த்து பாதுகாப்பாக வைக்கப்படும்.


Next Story