வாலிபர் தற்கொலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர் கைது


வாலிபர் தற்கொலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர் கைது
x
தினத்தந்தி 12 May 2019 3:15 AM IST (Updated: 12 May 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தற்கொலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பிரபு என்ற தெய்வசிகாமணி(வயது 19). கடந்த 4-ந் தேதி கூவத்தூர் பகுதியில் இவரும், இவருடைய காதலியும் மருந்தில்லா ஊசியை உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றனர். இதில் காதலி மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வருவதை கண்ட தெய்வசிகாமணி, காதலி இறந்து விட்டதாக நினைத்து, அங்கிருந்து தப்பிச்சென்று ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தெய்வசிகாமணி இறப்பு குறித்து தவறான தகவல்களை சமூக வலை தளங்களான வாட்ஸ்-அப் மற்றும் முகநூலில்(பேஸ்புக்) சாதி பிரச்சினை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் பரப்புபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் குறிச்சிகுளம் காலனி தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் தமிழ்வாணன்(20), தெய்வசிகாமணி இறப்பு குறித்து தவறான தகவல்களை சாதி பிரச்சினை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலை தளங்களான டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் பரப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அசாவீரன்குடிக்காடு கிராம நிர்வாக அதிகாரி தியாகராஜன் குவாகம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிந்து தமிழ்வாணனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story