சத்திரப்பட்டியில், வீடுகளின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் திருட்டு, இ- சேவை மையத்திலும் மர்ம நபர்கள் கைவரிசை


சத்திரப்பட்டியில், வீடுகளின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் திருட்டு, இ- சேவை மையத்திலும் மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 11 May 2019 11:15 PM GMT (Updated: 11 May 2019 8:12 PM GMT)

சத்திரப்பட்டியில், வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோக்களில் இருந்த 8 பவுன் நகை, ரூ.55 ஆயிரத்தை திருடிச்சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள இ- சேவை மையத்திலும் அவர்கள் கைவரிசை காட்டிச்சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சத்திரப்பட்டி, 

ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி அக்ரஹார வீதியை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 60). இவர் தனது வீட்டருகே சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜெயவேல் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் படுத்து தூங்கினர். அடுத்த நாள் காலையில் ஜெயவேல் எழுந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது.

மேலும் அதன் அருகில் உள்ள அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருடு போனதையறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசில் அவர் புகார் அளித்தார். அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நாச்சாத்தாள் (65). என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள துணிமணிகளை கீழே தள்ளி விட்டு அங்கு இருந்த 3 பவுன் நகை, ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது போலீசாருக்குதெரியவந்தது.

இதற்கிடையே வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் சத்திரப்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தின் கதவில் இருந்த பூட்டை உடைத்து பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ரூ.15 ஆயிரத்தை திருடிச்சென்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், 3 இடங்களிலும் சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தனரா? என்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது திருட்டு சம்பவம் நடந்த 3 இடங்களிலும் மோப்பம்பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வந்து 3 இடங்களிலும் பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 2 வீடுகள் இ-சேவை மையம் ஆகியவற்றில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.

Next Story