தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை விவசாயிகள் கட்டுப்படுத்தலாம் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தகவல்
தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை விவசாயிகள் கட்டுப்படுத்தலாம் என்று அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் சராசரியாக 16 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. காரீப் பருவத்தில் இறவை மக்காச்சோளம் தா.பழூர் வட்டாரத்தில் 2 ஆயிரம் எக்டேருக்கும் அதிகமாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளத்தில் அமெரிக்க படைப்புழுவின் தாக்குதல் அதிக அளவில் தென்பட்டது. இதனை பின்வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழுக்களை கட்டுப்படுத்த மே, ஜூன் மாதங்களில் கோடை உழவு செய்தல் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுகளை அழிக்கலாம். அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பேவேரியா பேசியானாவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூச்சி தாக்குதலை குறைக்கலாம். மக்காச்சோளம் விதைக்கும்போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு, ஆமணக்கு, சூரியகாந்தி, சாமந்திப்பூ ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
விவசாயிகள், விதைத்த ஒரு வாரம் முதல் 3 அல்லது 4 நாட்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து, கண்காணித்து இலையின் மேற்புரம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டை குவியல்கள் மற்றும் இளம்புழுக் கூட்டங்களை அழிக்க வேண்டும். விதைத்த 7-ம் நாள் அசாடிராக்டின் 1 சதம், வேப்ப எண்ணெய் 2 மில்லி லிட்டர், ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் முட்டைகள் இடுவதை தவிர்க்கலாம். முட்டை ஒட்டுண்ணி டிரைகோகிரம்மா பெர்டியோசம் 5 சி.சி. எக்டேருக்கு வெளியிடுதல் வேண்டும்.
சாம்பல், மணல் ஆகியவற்றை குருத்தில் இடுவதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். எனவே மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மேற்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story