சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.1 கோடி பறிப்பு ரவுடி கும்பலுக்கு வலைவீச்சு


சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.1 கோடி பறிப்பு ரவுடி கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 May 2019 4:00 AM IST (Updated: 12 May 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

துரைப்பாக்கத்தில், ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.1 கோடி மற்றும் சொத்து ஆவணங்களை பறித்த நெல்லையை சேர்ந்த கட்டப்பஞ்சாயத்து ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது தாகீர் (வயது 48). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், போரூரில் உள்ள ஒரு புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பணம் பெற்றதாகவும், ஆனால் சொன்னபடி பட்டா வாங்கி தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு முகமது தாகீரை சிலர் வரவழைத்து, கட்டப்பஞ்சாயத்து பேசினர். அதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நெல்லையை சேர்ந்த கட்டப்பஞ்சாயத்து ரவுடி கும்பல் திடீரென முகமது தாகீரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவருடைய மனைவியிடம் செல்போனில் பேசி ரூ.1 கோடி தரவேண்டும் என்று மிரட்டினர். இதனால் பயந்துபோன அவர், ரவுடி கும்பல் கேட்ட பணத்தை கொடுத்தார். இதையடுத்து ரூ.1 கோடி மற்றும் சொத்து ஆவணங்களை பறித்துக்கொண்டு ஓட்டலில் இருந்து முகமது தாகீரை விரட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக முகமது தாகீர் அளித்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டப்பஞ்சாயத்து செய்த ரவுடி கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story