ரெசார்ட்டில் குமாரசாமி ஓய்வெடுப்பது தவறு இல்லை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் சொல்கிறார்
ரெசார்ட்டில் குமாரசாமி ஓய்வெடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
ரெசார்ட்டில் குமாரசாமி ஓய்வெடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டு
குடகு மாவட்டம் மடிக்கேரியில் உள்ள ரெசார்ட்டில் தங்கி இருந்து முதல்-மந்திரி குமாரசாமி ஓய்வெடுத்து வருகிறார். ஆனால் மாநிலத்தில் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் குமாரசாமி, ரெசார்ட்டில் தங்கி இருப்பதாக பா.ஜனதா தலைவா்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
இதுகுறித்து துமகூருவில் நேற்று துணை முதல்- மந்திரி பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
ஓய்வெடுப்பது தவறு இல்லை
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரம் செய்திருந்தார். இதனால் அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால், அதற்காக உடுப்பிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
தற்போது 2 நாட்கள் ஓய்வெடுப்பதற்காக குடகு மாவட்டத்தில் உள்ள ரெசார்ட்டில் அவர் தங்கியிருந்து வருகிறார். இதில், எந்த தவறும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் ஓய்வெடுக்காமல் பிரசாரம் செய்ததால், தற்போது முதல்-மந்திரி ஓய்வெடுக்க சென்றுள்ளார்.
அரசு அலட்சியம் காட்டவில்லை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளும் பணிகளில் மாவட்ட கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த பணிகளை மேற்கொள்வதில் அரசு அலட்சியம் காட்டவில்லை.
பா.ஜனதாவினர் தேவையில்லாமல் முதல்-மந்திரி மீது குற்றச்சாட்டு கூறுகிறார்கள். நான் கூட ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். ஓய்வுக்காக வெளியூருக்கு செல்ல இருக்கிறேன்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
Related Tags :
Next Story