மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
பழனி அருகே மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி பச்சையாற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
நெய்க்காரப்பட்டி,
பழனி அருகே உள்ளது காவலப்பட்டி ஊராட்சி. இங்குள்ள சித்தரேவு, காவலப்பட்டி, தெற்கு தாதநாயக்கன்பட்டி உள்ளிட்ட 7 கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்த கிராமங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக பச்சையாறு திகழ்கிறது.
மழைக்காலத்தில் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றில் நீர்வரத்து உள்ள காலத்தில் கிணறுகளின் நீர்மட்டம் உயரும். இதன் மூலம் பருத்தி, தென்னை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பச்சையாற்றில் மணல் அள்ளும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது.
இதனால் காவலம்பட்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பச்சையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இதுதொடர்பாக கலெக்டர், சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனையடுத்து ஆற்றில் மணல் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்பட்டது.
இந்தநிலையில் தற்போது பச்சையாற்றில் மீண்டும் சிலர் மணல் அள்ளுகின்றனர். பகல் மற்றும் இரவு நேரத்தில் மாட்டு வண்டிகளில் மணலை அள்ளி, அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் கொட்டுகின்றனர். பின்னர் அவற்றை, லாரிகளில் ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
பச்சையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவலப்பட்டி, இரவிமங்கலம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பச்சையாற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பச்சையாறு கரையோரத்தில் உள்ள தோட்டத்தின் வழியாக பாதை அமைத்து மணல் அள்ளி வருகின்றனர்.
சில இடங்களில் 10 அடி ஆழத்துக்கு மணல் அள்ளி இருக்கின்றனர். இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள மரங்கள் சாய்ந்து விழுகின்றன. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. மணல் அள்ளுவதை தட்டிக்கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கின்றனர். எனவே பச்சையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story